கழிவு நீர் தொட்டியில் அழுகிய சடலம்; பதறிய சென்னை துறைமுக ஊழியர்கள்: நடந்தது என்ன?

கழிவு நீர் தொட்டியில் அழுகிய சடலம்; பதறிய சென்னை துறைமுக ஊழியர்கள்: நடந்தது என்ன?

சென்னை துறைமுக ஊழியர்கள் குடியிருப்பு கழிவுநீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை ராஜாஜி சாலை ராயபுரம் மேம்பாலம் அருகே அமைந்துள்ள துறைமுக ஊழியர்கள் குடியிருப்பில் இன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது தொட்டிக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் அதை வெளியே எடுத்து விட்டு மீண்டும் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது மனித மண்டை ஓடு கிடைத்துள்ளது. இதனால் பீதியடைந்த துப்புரவு ஊழியர்கள் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வடக்கு கடற்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீர் வெளியேற முடியாமல் அடைத்து கொண்டிருந்ததால் குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டி ஆட்களை வரவழைத்து தொட்டி திறந்து பார்த்த பொழுது சடலம் இருந்ததும், மேலும் இறந்தது சுமார் 30 வயது ஆண் சடலம் என்பதும் அவர் இறந்து 40 முதல் 45 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது.

மேலும் இறந்த நபர் நீல நிற அரைக்கால் ஜீன்ஸ் டவுசர் அணிந்திருந்ததும், உடல் முற்றிலும் அழகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் இறந்த நபரின் அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் காணாமல் போனவர்கள் பட்டியலில் தயார் செய்து விசாரணை தொடங்க இருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்குள் இந்த நபர் எப்படி வந்தார், யாரேனும் கொலை செய்து தொட்டிக்குள் போட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in