விருந்துக்கு வந்த புதுமணத்தம்பதி வீட்டில் 35 பவுன் கொள்ளை: 1 வருடம் கழித்து கைது செய்யப்பட்ட உறவினர்

கைது செய்யப்பட்ட சுரேஷ்
கைது செய்யப்பட்ட சுரேஷ்விருந்துக்கு வந்த புதுமணத்தம்பதி வீட்டில் 35 பவுன் கொள்ளை: 1 வருடம் கழித்து கைது செய்யப்பட்ட உறவினர்

சென்னையில் புதுமணத்தம்பதியின் நகையைக் கொள்ளையடித்து தலைமறைவான உறவினரை ஒராண்டு கழித்து போலீஸார் கைது செய்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் அப்பா சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன்(26). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நரேந்திரனுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அதே மாதம் அவரது நெருங்கிய உறவினரான கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவரின் வீட்டிற்கு விருந்திற்காக நரேந்திரன் சென்றுள்ளார்.

விருந்தை முடித்துவிட்டு மறுநாள் மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய நரேந்திரன் தன் மனைவிக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்காக பீரோவில் வைத்திருந்த தாலிக்குண்டுகளை தேடினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தாலிக்குண்டுகள் மற்றும் மேலும் சில நகைகள் காணாமல் போனதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தார். 

தனது வீட்டில் பூட்டி பத்திரமாக வைக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடிச் சென்றது யார் என்பதை அறிவதற்காக நரேந்திரன் தனது பக்கத்து வீட்டாரின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது விருந்திருக்கு அழைத்த உறவினர் வனிதாவின்  கணவர் சுரேஷ், தனது வீட்டிற்கு  வந்து  செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டு நரேந்திரன் சந்தேகமடைந்தார்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்விருந்துக்கு வந்த புதுமணத்தம்பதி வீட்டில் 35 பவுன் கொள்ளை: 1 வருடம் கழித்து கைது செய்யப்பட்ட உறவினர்

பின்னர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி நரேந்திரன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அவரது உறவினரான வனிதாவிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது  நரேந்திரன் விருந்திற்காக தன் வீட்டிற்கு வந்த சமயம் தனது கணவர் சுரேஷ் அவரது இருசக்கர வாகனத்தின் சாவியுடன் நரேந்திரனின் வீட்டுச் சாவியையும் எடுத்துச் சென்று வீட்டில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் நகைகளை கொள்ளையடித்தது அம்பலமானது.

இது தொடர்பாக காவல்துறையினர்  தன்னைத் தேடுவதை அறிந்த சுரேஷ் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டார். கடந்த ஓராண்டு காலமாக சுரேஷ் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த மயிலாப்பூர் தனிப்படை காவல் துறையினர் சுரேஷை கைது செய்து அவரிடம் இருந்த 35 சவரன் நகைகளை மீட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிபதிகளின் உத்தரவின் பெயரில் சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in