
அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட 10 ரூபாய் பழ ஜூஸ் பாக்கெட்டிற்குள் குட்டி எலி இறந்து கிடந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள பி.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் காட்பாடி - குடியாத்தம் சாலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தனது குழந்தைகளுக்கு, அட்டைபெட்டியில் அடைக்கப்பட்ட ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் மாஸா நிறுவனத்தின் மாம்பழ ஜூஸ் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த ஜூஸினை குடித்த குழந்தைகள், ஜூஸ் கசப்பதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் அந்த ஜூஸ் பாக்கெட்டை பிய்த்து பார்த்த போது, அந்த ஜூஸ் பாக்கெட்டினுள் குட்டி எலி ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பழ ஜூஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த அந்த குட்டி எலியினை வீடியோ படம் பிடித்து அதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு இது போன்ற உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் எச்சரிக்கையுடம் இருக்கும் வகையில் அந்த காட்சியினை சமூக வலை தளங்களிலும் பதிவிட்டுள்ளார். சீனிவாசன் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.