மாற்றுத்திறனாளி ஊழியரை தனது இருக்கையில் அமரவைத்த பெண் அதிகாரி: ஓய்வு நாளில் கண்கலங்க வைத்த சம்பவம்

நாகராஜன் இருக்கையில் அமர அருகில் இருக்கும்  மேலாளர் மோகனபிரியா
நாகராஜன் இருக்கையில் அமர அருகில் இருக்கும் மேலாளர் மோகனபிரியா

பணி ஓய்வு பெற்ற தனது அலுவலக கடைநிலை ஊழியரை தனது இருக்கையில் அமரச்செய்து கௌரவித்து அவரருகில் நின்று பாராட்டியுள்ளார் ரயில்வே உயர் அதிகாரியாக பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர்.

திருச்சியில் உள்ள தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக (பதிவேடுகள் எழுத்தர்) பணிபுரிந்தவர் நாகராஜன். இவர் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. தனது பணியில் குறை சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாக பணிபுரிந்தவர். அவர் நேற்று மாலை ஓய்வு பெற்றார்.

அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வு நேற்று மாலை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவரை கௌரவிக்கும் விதமாக, அவரது அலுவலகத்தில் உள்ள உயர் அலுவலர்களில் ஒருவரான திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்ரியா, நாகராஜனை கைப்பிடித்து அழைத்துச் சென்று தனது இருக்கையில் அமரச்செய்தார். அவரது குடும்பத்தினரை அவர் அருகில் நிற்கவைத்து தானும் உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்துடன் நாகராஜனை குடும்பத்தினர் மத்தியில் வெகுவாக பாராட்டினார்.

இதனால் நாகராஜன் மிகவும் மனம் நிறைந்து போனார். தனது உயர் அதிகாரியின் கையைப் பிடித்துக் கொண்டு நன்றி தெரிவித்தார். இதன் மூலம் நாகராஜனின் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். உயர் அதிகாரிகள் என்றால் கடைநிலை ஊழியர்களை அற்பமாக நினைத்து நடத்தும் இன்றைய காலகட்டத்தில் இந்த அதிகாரியின் மரியாதை தரும் விதமான, மனிதாபிமானமிக்க செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in