`வீட்டில் குழந்தை பெற்றால் ஏ1 குற்றவாளியா?- போலீஸ் டார்ச்சரால் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் குதித்த இளம்பெண்

`வீட்டில் குழந்தை பெற்றால் ஏ1 குற்றவாளியா?- போலீஸ் டார்ச்சரால் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் குதித்த இளம்பெண்

வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொண்டதற்காக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையால் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் கைக்குழந்தையுடன் சம்பந்தப்பட்ட பெண்ணும் கலந்து கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூர்  கிராமத்தைச் சேர்ந்த ஜான் - பெல்சியா தம்பதியினர் தங்களது இரண்டாவது பிரசவத்தை வீட்டிலேயே சுகப்பிரசவமாக  பார்த்துக் கொண்டனர்.  வீட்டிலேயே பிரசவம் பார்த்தது தவறு என்று கூறி பொது சுகாதாரத்துறையினர் அவரை வீடு தேடி வந்து மிரட்டினர்.  கைக்குழந்தையுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு வலியுறுத்தினர். அதற்கு பெல்சியா மறுப்பு தெரிவிக்கவே அன்று இரவு போலீஸாருடன் வந்த சுகாதாரத்துறையினர் அவரை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்தனர்.  வர மறுத்ததால் கணவரை கைது செய்து விடுவதாகவும் மிரட்டினர்.  அப்பொழுதும் அவர்கள் செல்லாததால் அவர்கள் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில் நோய் பரப்புதல், ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இயற்கை வாழ்வியலாளர் நலம் அறக்கட்டளை சுதாகர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை வாழ்வியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இதனால் பல்வேறு தரப்பினரும் ஜான்- பெல்சியா தம்பதியினருக்கு ஆதரவாக  சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடைபெற்றது.  இதில் தனது கைக்குழந்தை மற்றும் மகன், கணவன் ஆகியோருடன் பெல்சியாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.  பெல்சியா வைத்திருந்த பதாகையில், `வீட்டில் குழந்தை பெற்றால் ஏ1 குற்றவாளியா? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in