
வருமானத்திற்கு அதிகமாக 1.66 கோடி சொத்து சேர்த்ததாக கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்ட காவலர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆலந்தூர் மோர்சன் தெருவில் வசித்து வருபவர் சௌந்தர்ராஜன். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். சென்னை காவல்துறையில் தலைமைக் காவலராக மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த சௌந்தர்ராஜன் பணியின் போது லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2021-ம் ஆண்டு கட்டாய விருப்ப பணிஓய்வு அளிக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் பணியின் போது லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி உமாதேவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
குறிப்பாக 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் சௌந்தர்ராஜன் மத்திய குற்றப்பிரிவில் வெளிநாட்டு மண்டல பதிவு அலுவலகத்தில் காவலராக பணியாற்றி போது லஞ்சம் வாங்கி தனது மனைவி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு 1.36 லட்சமாக இருந்த அவரது சொத்துமதிப்பு தற்போது கூடுதலாக 1.66 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது 750 சதவீதம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் முன்னாள் காவலர் சௌந்தர்ராஜன் பணியில் இருந்தபோது தனது மனைவி உமாதேவி பெயரில் சேலம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர் பகுதியில் 1.66 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் காவலர் சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.66 கோடி சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.