நள்ளிரவில் கல்லூரி மாணவிக்கு தொலைபேசியில் தொல்லை… கண்டித்ததால் விபசார வழக்கு போடுவேன் என மிரட்டும் காவலர்: வைரல் ஆடியோவால் பரபரப்பு!

நள்ளிரவில் கல்லூரி மாணவிக்கு தொலைபேசியில் தொல்லை… கண்டித்ததால் விபசார வழக்கு போடுவேன் என மிரட்டும் காவலர்: வைரல் ஆடியோவால் பரபரப்பு!

நள்ளிரவில் கல்லூரி மாணவிக்குத் தொலைபேசியில் தொல்லை கொடுத்ததுடன் விபசார வழக்குப் போடுவேன் என காவலர் மிரட்டும் ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் புறவழிச் சாலை போரூர் சுங்கச் சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் காவல்நிலைய காவலர்கள் இருவர், காரில் இருந்தவர்களை இங்கு நிற்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.

அப்போது, அவர்கள் இருவரும் நாங்கள் காதலர்கள் என்றும், இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அதை போலீஸார் நம்பாததால், உடனே அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் செய்து போலீஸாரிடம் கொடுத்துள்ளனர்.

அதற்கு பெற்றோர்களும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களது பெயர்,முகவரி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மதுரவாயல் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் நள்ளிரவு நேரத்தில் அந்த கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் உனது நண்பர் தொலைபேசி எண்ணை கொடுத்தார் என பேசமுற்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண் கேட்ட கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாததால், நேற்று போரூர் டோல்கேட் அருகே பிடிபட்டதை கூறி உனது காதலனின் தந்தை உன் மீது புகார் அளித்து இருப்பதாகவும், நீ பாலியல் தொழில் செய்வதாக வழக்குப் போடுவேன் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

காவலரின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட அந்த கல்லூரி மாணவி இதுகுறித்து காதலனிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். உடனே அவரது காதலன், அந்த காவலரைத் தொடர்புகொண்டு கண்டித்துள்ளார்.

அதன் பிறகும் காவலர் கிருஷ்ணகுமார் விடாமல் பெண்ணிற்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அந்த பெண்ணைப் பாலியல் தொழிலாளி எனவும், இருவரும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என காவலர் கிருஷ்ணகுமார் மிரட்டியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட காதல் ஜோடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலரின் பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் ஆடியோவுடன் இன்று புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர் கிருஷ்ணகுமாரிடம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் மிரட்டும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in