விடுதிக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு; நொறுங்கிய அறை; சென்னையில் இரவில் நடந்த பயங்கரம்

விடுதிக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு; நொறுங்கிய அறை; சென்னையில் இரவில் நடந்த பயங்கரம்

சென்னையில் தனியார் தங்கும் விடுதிக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் வரவேற்பு அறை, கண்ணாடிகள் நொறுங்கியது. இரவில் குண்டு வீசிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வடபழனி கங்கப்பா நாயுடு தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அதே பகுதியில் எம்.ஆர்.எம். ரெசிடெண்ட்ஸ் என்ற பெயரில் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் விடுதி இயங்கி வந்த போது இரவு 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென கையில் வைத்திருந்த இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை விடுதிக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அப்போது பலத்த சத்தத்துடன் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்ததில் வரவேற்பு அறை, கண்ணாடி சேதமடைந்தது. அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிம் அன்சாரி அளித்த தகவலின் பெயரில் வளசரவாக்கம் உதவி ஆணையர் மற்றும் விருகம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் தாம்சன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து இரண்டு காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து லாட்ஜின் வரவேற்பு அறையில் தூக்கி வீசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதில் பதிவான முக அடையாளங்களை வைத்து விருகம்பாக்கம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in