
சிதம்பரம் அருகேயுள்ள பி .முட்லூர் ஆஞ்சநேயர் கோயில் நிறுவனர் இல்லத்தின் மீது நேற்று இரவு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் போலீஸாரின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து அத்தகைய சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பி முட்லூரில் சீனு என்கிற ராமதாஸ்( 52) வசித்து வருகிறார். இந்து முன்னணி ஆதரவாளரான இவர் அப்பகுதியில் ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றையும் கட்டியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த TN.05AA.3791 மகேந்திரா ஜீப் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் ஜீப்பின் முன் பகுதியில் லேசாக புகை படிந்துள்ளது. வேறு பெரிதான பாதிப்புக்கள் எதுவும் இல்லை.
தகவல் அறிந்து சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பரங்கிப்பேட்டை போலீஸார் தனிப்படை அமைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.