காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலி: புறா பிடிக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலி: புறா பிடிக்கச் சென்றவர்  மின்சாரம் தாக்கி பலி

சேலம் அருகே பிழைப்பிற்காக புறா படிக்க சென்றவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே  செங்கொடி நகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் கொடிவேல் (56). இவர்  புறா, கொக்கு  உள்ளிட்ட பறவைகளை வலை வைத்து  பிடித்து,  விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டி  வாழ்க்கை நடத்தி வந்தார்.

அதன்படி  நேற்று இரவு செந்தாரப்பட்டியை அடுத்துள்ள, மண்மலை பாலக்காடு, கூக்கங்காடு பகுதிக்கு புறா பிடிக்க சென்றார். அங்குள்ள  சங்கர் (63) என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் புறாக்கள் அடைந்திருப்பதைக் கண்டு கொண்ட அவர் அந்த  புறாக்களைப் பிடிக்க திட்டமிட்டு சென்றார்.

அங்கு, சோளப்பயிர்களைக் காட்டுப்பன்றிகள் நாசம் செய்யாமல் காப்பாற்ற, சங்கர், வயலைச் சுற்றி கம்பிவேலி அமைத்து, அதில் மின்சாரம் கொடுத்து வைத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் புறாவைப் பிடிக்கும் ஆர்வத்தில்  அதை கவனிக்காமல் சென்ற கொடிவேல், மின்வேலியை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் கொடிவேல்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, தம்மம்பட்டி காவல் துறையினர், கொடிவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து, விவசாயி சங்கரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in