பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்த வாகனம்; தூக்கி வீசப்பட்ட பக்தர் உயிரிழப்பு: திருச்செந்தூருக்கு சென்றபோது துயரம்

திருச்செந்தூருக்கு  காவடியுடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள்(கோப்புப் படம்)
திருச்செந்தூருக்கு காவடியுடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள்(கோப்புப் படம்)

ஆலங்குளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்களின் கூட்டத்தில் மோட்டார் சைக்கிள் புகுந்தது. இதில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த பக்தர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சங்கர்(45) சொந்தத் தொழில் செய்து வந்தார். இவர் தன் ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தார். ஆலங்குளம் அருகில் உள்ள சிவலார்குளம் விளக்குப் பகுதியில் இவர்கள் கூட்டமாகச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே கீழகரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்னும் நுங்கு வியாபாரி தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

அப்போது அன்புராஜின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வைகாசி விசாக விழாவுக்கு திருச்செந்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர் சங்கர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சங்கர் தூக்கி வீசப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த சங்கர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அங்கு சிகிச்சைப் பலன் இன்றி இன்று சங்கர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாகச் சென்றவர் பைக் மோதி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in