3 மாத பெண் குழந்தையை ரயிலடியில் விட்டுச்சென்ற தாய்: 24 மணிநேரத்தில் தேடிப்பிடித்த போலீஸ்!

குழந்தையை விட்டுச் சென்ற தாய்
குழந்தையை விட்டுச் சென்ற தாய்3 மாத பெண் குழந்தையை ரயிலடியில் விட்டுச்சென்ற தாய்: 24 மணிநேரத்தில் தேடிப்பிடித்த போலீஸ்!

மூன்று மாத பெண் குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற தாயை, சமூக வலைதளம், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் 24 மணி நேரத்தில் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி (63) என்பவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி ரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை எண் ஒன்றில் காத்திருந்தார். அப்போது அவரிடம் கைக்குழந்தையுடன் வந்த பெண்மணி ஒருவர், தனது 3 மாத பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும், ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தையைக் கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி, காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரும்பு பாதை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் சிறிது நேரம் நடைமேடையை வலம் வரும் பெண்மணி, மூனறு மாத பெண்குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார்.

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இருப்பு பாதை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீஸார், சமூக வலைதளங்கள் மூலமாக குறிப்பாக வாட்ஸ்அப் மூலமாக குழந்தையின் புகைப்படத்தையும், தாயின் புகைப்படத்தையும் பதிவிட்டு தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் மூலமாக வேலூர் மோதக்கல் கிராமத்தில் இருக்கும் குழந்தையின் தாயை போலீஸார் கண்டுபிடித்தனர். விசாரணையில் கலைச்செல்வி என்பவருக்கு பிறந்த நான்காவது பெண் குழந்தை என்பது தெரிய வந்துள்ளது. கணவர் விஜய் திருப்பூரில் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதாகவும், குடும்ப வறுமை காரணமாக பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் ரயில்வே நிலையத்தில் மூதாட்டியிடம் விட்டுச் சென்றதாகவும் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரயில்வே இருப்பு பாதை போலீஸார், குழந்தையின் பெற்றோரை எச்சரித்ததோடு மட்டுமல்லாது குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் மூலமாக கலைச்செல்வியின் குழந்தைகள் வளர்வதற்கும் படிப்புக்குமான உதவியை செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இதுபோன்று குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அந்த குழந்தைக்கு ’தமிழ் மகள்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in