
தனது மகள் மீது 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக அவரது தாய் போலீஸில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் சுந்தரத்தாய் (45). இவரது மகள் நிவேதா (21). அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் தாயின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.
நிவேதாவின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத சுந்தரத்தாய், மகளிடம் தனது உறவை முறித்து கொண்டார். இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கடந்த ஜூன் மாதத்தில் நிவேதா திருடிச் சென்றுவிட்டதாக சுந்தரத்தாய் வத்திராயிருப்பு போலீஸில் புகாரளித்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் இது குறித்து திருவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிவேதா, அவரது கணவர் பிரபாகரன், அவரது பெற்றோர் ஆகியோர் மீது வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மகள் மீது பெற்ற தாயே திருட்டு புகார் அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.