
மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக புதுமணத் தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறையை அறிவித்து இருக்கிறது சீனா.
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அண்மையில் சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதையடுத்து மக்கள் தொகையை அதிகரிக்க சீனா அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி புதுமணத் தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாதம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறது சீனாவில் உள்ள கான்சூ, ஷாங்ஸி மாகாணங்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால் அந்நாட்டில் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 1000 தம்பதிகளில் வெறும் 6.77 சதவீதம் பேருக்கு மட்டுமே குழந்தை பிறப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை ஊக்குவிக்கவும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனா அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன்படி திருமணம் முடிந்த திருமண தம்பதிகளின் விடுமுறையை ஒரு மாதமாக அதிகரிப்பதோடு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த நாட்டில் உள்ள கான்சூ, ஷாங்ஸி மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.