உடலுக்கு ஆரோக்கியமான காய்கறி; கூவி கூவி விற்பனை: பள்ளியில் `மாதிரி சந்தை' அமைத்து அசத்திய மாணவர்கள்

மாணவர்களின் மாதிரி சந்தை
மாணவர்களின் மாதிரி சந்தை

நாகை அருகே நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் கற்றலுக்காக மாதிரி சந்தை அமைத்து விற்றும், வாங்கியும் நேரடி கள அனுபவம் பெற்றனர்.

ஆறாம் வகுப்பு சமூக அறிவியலில் "பொருளியல்"என்ற பாடமும் தமிழில் "வளரும் வணிகம்"என்ற பாடமும் இந்த பருவத்தில் உள்ளது. கணிதத்தில் ரூபாய் மற்றும் அளவைகள் கணக்கீடு உள்ளது. வகுப்பறை கற்பித்தலை விட இதை மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்வதற்காக ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களை ஒரு நாள் "மாதிரி சந்தை" அமைக்க அறிவுரை கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள்,  நெல்லிக்கனிகள், கொய்யா பழங்கள் மேலும் வீட்டில் உள்ள முட்டைகள், அவித்த கடலை போன்ற பொருள்களை  ஆறாம் வகுப்பு மாணவர்கள் இன்று  வியாபாரத்துக்காக பள்ளிக்கு கொண்டு வந்தனர்.  வகுப்பறை கட்டிடத்தில் அவற்றை வைத்து  "மாதிரி சந்தையை" காட்சிப்படுத்தினர்.

அவற்றை மாணவர்கள் மற்ற மற்றவர்களிடம் விற்பனை செய்தனர். செயற்கை உரம் இல்லாமல் விளைந்த பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியமான பொருட்கள் என்று பல வகையில் தங்கள் பொருள்களின் தரத்தை எடுத்துக் கூறி விற்பனை செய்தனர். மற்றவர்களை  கூவி கூவி அழைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்தனர்.  

மற்ற வகுப்பு மாணவர்களும் சந்தையை பார்வையிட வந்து தங்களுக்கு தேவையான கனிகள், அவித்த கடலை போன்ற பொருட்களை விலை பேசி வாங்கினார்கள். அவர்கள் கூறிய விலைக்கு  பணம் கொடுத்து கணக்கிட்டு மீதத்தொகையை மாணவர்கள் திரும்ப பெற்றனர். விற்காமல் மீதம் இருந்த காய்கறிகளை சத்துணவு சமைப்பதற்கு மாணவர்கள் மனமுவந்து அளித்தனர்.

இந்நிகழ்வின் மூலம் தமிழ், சமூக அறிவியல் , கணக்கு ஆகிய பாடங்களில் உள்ள பாடப் பொருள்களை மாணவர்கள் ஆர்வத்துடனும் எளிதாகவும் கற்றுக் கொள்வதோடு வாழ்வியலுக்கு தேவையான கற்றல்களை மாணவர்கள் பெறுவதாக தலைமை ஆசிரியர் சிவா தெரிவித்தார். சந்தை அமைப்பதற்கான வழிகாட்டு முறைகளை ஆசிரியை அலமேலு  வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in