
யாராவது இறந்து விட்டால் செல்போனில் அழைத்தால் எரியூட்டும் தகனமேடையை இறந்தவர்களின் இல்லத்திற்கே எடுத்துவந்து அந்த இடத்திலேயே எரியூட்டி சாம்பலை கொடுத்து விட்டு செல்லும் புதிய முறை ஈரோட்டில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதற்கு உடலை எடுத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுடுகாட்டுக்கு சென்று தகனம் செய்வது தற்காலங்களில் ஒரு பெரிய செயலாக மாறிவிட்டது. இந்த நிலையில் தான் இதற்கு தீர்வு காணும் விதமாக நடமாடும் எரியூட்டும் தகன வாகன சேவை ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறத்தில் வசிக்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடமாடும் எரியூட்டு வாகனம் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எரியூட்டும் தகன வாகன சேவை ஈரோடு சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
9655719666 என்ற கட்டணமில்லா கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யும் நபர்கள் உறுதிமொழி படிவம் மற்றும் அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
இந்த எரியூட்டும் வாகனத்தின் இயக்கத்தை தொடங்கிவைத்த ரோட்டரி ஆத்மா அறக்கட்டளைத் தலைவர் வி.ராஜமாணிக்கம் கூறுகையில், "இத்திட்டம் ரோட்டரி சங்க நன்கொடையாளர்கள் உதவியுடன் தமிழகத்தில் முதல்முறையாக ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய வேண்டுமானால் ரூ.15,000 வரை செலவாகும்.
அத்துடன் எரியூட்ட சுமார் 8 மணி நேரம் ஆகும். இந்த வாகனம் மூலம் எரியூட்டும் போது ஒரு மணி நேரத்தில் எரியூட்டி அஸ்தி வழங்கப்படும். இதனால் கிராமப்புற மக்கள் பயன்பெறுவார்கள். இதற்கு ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டு சடலம் எரியூட்டப்படும்" என்றார்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் கூடுதலாக எரியூட்டும் தகன வாகனங்கள் தயார் செய்யப்படும் எனவும் ரோட்டரி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.