இரவில் வேலம்மாள் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அதிகாரிகள்!- நடந்தது என்ன?

வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி படம்: ஜாக்சன் ஹெர்பி

வீடு இல்லாமல் தான் மிகவும் கஷ்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார் வைரல் பாட்டி வேலம்மாள். இந்நிலையில் நேற்று இரவு திடீர் சர்ப்ரைஸாக வேலம்மாள் பாடியைத் தேடிப்போன அரசு உயர் அதிகாரிகள் அவருக்கு இலவச வீட்டிற்கான ஆணையை வழங்கினர்.

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. கரோனா காலக்கட்டத்தில் நோயாளிகளின் சிகிச்சை அறைக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்ததில் தொடங்கி, முதன்முதலில் கரோனா நோயாளி இறப்புக்குப் பின் எரியூட்டப்படுவதுவரை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருந்தார். அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு போய்ச்சேரும் வகையில் தனித்திறன்மிக்க புகைப்படங்களாக எடுப்பது ஜாக்சன் ஹெர்பியின் வழக்கம்.

அந்தவகையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்னும் பாட்டியை ஜாக்சன் ஹெர்பி எடுத்த படம் வைரல் ஆனது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் ஃபேமஸ் ஆனார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு எனத் தன் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

அண்மையில் மழைபாதிப்பினைப் பார்வையிட குமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் பாட்டியை புகைப்படம் எடுத்து வைரலாக்கிய அதே புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, சில தினங்களுக்கு முன்பு வேலம்மாள் பாட்டியின் வீடியோ ஒன்றை தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அதில் வேலம்மாள் பாட்டி, “முதலமைச்சரய்யா... நேரில் பார்க்கும்போது நீங்கள் வீடு தருகிறேன் என்று சொன்னீங்க. நான் கலெக்டர் ஆபீஸ்க்கு போயிட்டு இருக்கேன். இதுவரை தரவில்லை. தெருவில் நிற்கிறேன் அய்யா!” என அந்த வீடியோவில் வேதனையோடு கூறியிருந்தார். முதல்வரின் கவனத்திற்கு என்னும் கேப்ஷனோடு இந்த வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் பரவிவந்தது.

ஏற்கெனவே வேலம்மாள் பாட்டி முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு முதியோர் பென்சன் வழங்கப்பட்டுவரும் நிலையில் இந்த வீடியோவுக்குப் பின்பு நேற்று இரவு இன்னொரு நல்லவிசயமும் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பால்குளம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நகலை நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் வேலம்மாள் பாட்டியிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, வேலம்மாள் பாட்டியோடு சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in