கோவையில் மாயம், கேரளாவில் மீட்பு: 2 ஆண்டுகளுக்கு பிறகு உறவுகளுடன் இணைந்த பெண் ஆனந்த கண்ணீர்

குடும்பத்தினருடன் உமாதேவி
குடும்பத்தினருடன் உமாதேவி கோவையில் மாயம், கேரளாவில் மீட்பு: 2 ஆண்டுகளுக்கு பிறகு உறவுகளுடன் இணைந்த பெண் ஆனந்த கண்ணீர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவையில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் கேரளாவில் மீட்கப்பட்டு குடும்பத்துடன் இணைந்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவரது மனைவி ருக்குமணி (50). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுடன்  ருக்குமணியின்  தங்கை  உமாதேவி(40) என்பவரும் சேர்ந்து வசித்து வந்தார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். 

செல்வராஜ் குடும்பத்தார் இவரை பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர். இதனிடையே உமாதேவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென  காணாமல் போய்விட்டார். செல்வராஜ்  குடும்பத்தினர் அவரை  பல்வேறு இடங்களில்  தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளா அரசு வீடற்று சாலையில் சுற்றுபவர்களை மீட்டு அவரது குடும்பத்தாரிடம் சேர்க்கும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காந்திபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் கேரளா  மாநிலம் கொல்லம் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உமாதேவியை மீட்டுள்ளனர்.  நான் நலம் சரியில்லாமல் இருந்தவரை  அறக்கட்டளை செயலாளர் புனலூர் சோமராஜன் ஏற்பாட்டின் பேரில் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

அவருக்கு தொடர்ந்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில்  உமாதேவி மெல்ல மெல்ல குணமடைந்தார். அதனையடுத்து உமாதேவி அவரது உறவினர்களைப்  பற்றிய தகவல்களை  அறக்கட்டளை நிர்வாகிகளிடம்  தெரிவித்தார். இதனையடுத்து கோவை கருமத்தம்பட்டி போலீஸாரை தொடர்பு கொண்டு உமாதேவி பற்றிய  விவரத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய  கருமத்தம்பட்டி போலீஸாரின் தீவிர  முயற்சியால் உமாதேவியின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல்  அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உமாதேவியை  தமிழகம் அழைத்து வந்த அறக்கட்டளை நிர்வாகிகள்  இன்று காலை கருமத்தம்பட்டி காவல் நிலையில் வைத்து  உமாதேவியை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், "எனது மாமியார் இறப்பதற்கு முன்னால் உமாதேவியை பத்திரமாக நல்ல முறையில்  பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனது குடும்பத்தில் ஒருவராக வைத்து  பாராமரித்து வருகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் திடீரென காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தோம். கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் இறைவன் அருளால்  தற்போது கிடைத்துள்ளார். அவர் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகள்" என்றார்.

உமாதேவி தனது குடும்பத்தாரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார்.  அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. குடும்பத்தினரும் கட்டியணைத்து அவரை ஏற்றுக் கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் முன்  காணாமல் போனவர் தனது  குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in