மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழக அரசு: மக்களே கருத்து கேட்பு இன்றே கடைசி!

மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழக அரசு: மக்களே கருத்து கேட்பு இன்றே கடைசி!

மின் கட்டணம் உயர்வு குறித்த பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறும் என்றும், பொதுமக்கள் அதுகுறித்த தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. அதன்படி மிக, மிக கடுமையான அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது. வீட்டு உபயோகத்திற்கு ஏற்கெனவே வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியமும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 யூனிட் முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் 500 யூனிட்டுக்கும் மேல் மின்சாரத்தை பயன்படுத்துகிறவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்குவரை மின் கட்டணம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களும் மின் கட்டண உயர்வு குறித்து பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

மின்கட்டண உயர்வு குறித்த கருத்துகளை அளிக்க மின் நுகர்வோருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த 30 நாட்கள் ஆகஸ்ட் 22-ம் தேதியான இன்றோடு முடிவடைகிறது. எனவே இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்பதற்காக இறுதி நாளான இன்று கருத்து கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்கட்டணம் உயர்வு குறித்த தங்களின் கருத்துக்களையும், ஆட்சேபங்களையும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை மற்றும் கோவையில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in