கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவரின் நிலை என்ன? - சுற்றுலா சென்றபோது நேர்ந்த பரிதாபம்

காரைக்கால் கடற்கரையில் போலீஸார்
காரைக்கால் கடற்கரையில் போலீஸார்

காரைக்கால் கடலில் குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட திருவாரூர் மருத்துவ கல்லூரி மாணவர்களில் மூன்று மாணவிகள் மீட்கப்பட்ட நிலையில் மாயமான  ஒரு மாணவரின் நிலை என்ன என்பது  தெரியாமல் உறவினர்கள்  மற்றும் போலீஸார் தவித்து வருகின்றனர். 

திருவாரூர் மருத்துவ கல்லூரியில் துணை மருத்துவ படிப்பான ரேடியாலஜி உள்ளிட்ட பிரிவுகளில்  படிக்கும் 15 மாணவ மாணவியர்கள் நேற்று காரைக்காலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.  காரைக்கால் கடற்கரையில் ஆபத்தான பகுதி என்று அரசால்  அறிவிக்கப்பட்டு, கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகையும்  வைக்கப்பட்டுள்ள பகுதியில் மூன்று மாணவிகளும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் என்ற மாணவரும் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய அலையால்  அவர்கள் நால்வரும் அடித்துச் செல்லப்பட்டனர். அதைப் பார்த்த மற்ற மாணவர்கள் மற்றும் கரையில் இருந்த பொதுமக்கள் உடனடியாக  கடலில் இறங்கி அனைவரையும் காப்பாற்ற முயன்றனர்.

அதில் மூன்று மாணவிகள் மீட்கப் பட்டனர். ஆனால் சிவகுமாரை அலை வெகு தூரம் இழுத்துச் சென்றதால் மீட்க முடியவில்லை. மாணவிகள் மூவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சிவகுமாரை தேடும் முயற்சிகள் தொடர்ந்தன. காரைக்கால் போலீஸார் மற்றும் கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மாணவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வரை அவரது நிலை என்ன ஆனது என்பது தெரியாததால் அவரது குடும்பத்தாரும் காரைக்கால் போலீஸாரும்  கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in