அறுவை சிகிச்சையை மறைத்த மணமகன்; கண்டுபிடித்த மணமகள்: 24 மணி நேரத்தில் முறிந்து போன திருமணம்

அறுவை சிகிச்சையை மறைத்த மணமகன்; கண்டுபிடித்த மணமகள்: 24 மணி நேரத்தில் முறிந்து போன திருமணம்

காலில் செய்த அறுவை சிகிச்சையை மறைத்ததாகக் கூறி திருமணமான 24 மணி நேரத்தில் மணமகனை இளம்பெண் உதறித் தள்ளிய சம்பவம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் பிஎன்ரோடு பூலுவப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் திலகன்(25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. நேற்று இருவீட்டார் முன்னிலையல் ஒரு கோயிலில் திலகனுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் பின் திருமண வரவேற்பு நடைபெற்றது.

அப்போது திலகனின் காலை பார்த்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். இளைஞரின் 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருந்தது. இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மணமகள், மணமகனிடம் கேட்டார், அதற்கு ஒரு விபத்தில் அடிபட்டுவிட்டதால் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக திலகன் பதிலளித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் அதை ஏன் திருமணத்திற்கு முன்பாக தன்னிடம் கூறவில்லை என்று ஆத்திரமடைந்தார். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மண்டபத்தில் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

திலகன் வீட்டார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மணமகள் சமாதானம் அடையவில்லை. இதனால் இரு வீட்டாரும் பிரச்சினையை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸார் பேசிப்பார்த்தும் மணப்பெண், இந்த திருமணத்தில் உடன்பாடில்லை என்று கூறி விட்டார். இதனால் இரு வீட்டார் முன்னிலையில், பிரிந்து சென்றனர். திருமணமான 24 மணி நேரத்திற்குள் மணமகனை வேண்டாம் என்று இளம்பெண் உதறிச் சென்ற சம்பவம் பூலுவப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in