`ஆபாச படம் பார்த்த உன்னை கைது செய்யப் போகிறோம்'- திருச்சி வாலிபரை மிரட்டி பணம் பறித்த கோவை வாலிபர் கைது

கோவை வாலிபர் அசோக்
கோவை வாலிபர் அசோக்

செல்போனில் ஆபாச படம் பார்த்ததால் உன்னை கைது செய்யப் போகிறோம் என்று போலீஸ்காரர் போல மிரட்டி திருச்சியை சேர்ந்த ஒருவரிடம் பணம் பறித்த கோவை இளைஞனை போலீஸார் கைது செய்துள்ளனர். 

திருச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு அலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதை எடுத்து பேசியபோது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை போலீஸ்காரர்  என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, "நீ  செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளாய். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனால் உன்னை கைது செய்யப் போகிறோம்"  என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன திருச்சி நபர்  'வழக்கு ஏதும் பதிய வேண்டாம்' என கேட்டுக் கொண்டார். 

அப்படியானால் கொஞ்சம் பணம் செலவாகும் என்று எதிர்முனையில் கூறவே இவரும் ஒப்புக்கொண்டார். உடனே அந்த மர்ம நபர் தனது வங்கிக் கணக்கு எண்  விவரங்களை அனுப்பி அதில் 5000 ரூபாய் செலுத்தும்படி சொன்னாராம். இவரும் உடனடியாக செலுத்தி இருக்கிறார். அதோடு முடிந்து போனது என்று திருச்சி நபர் நினைத்துக் கொண்டிருக்க ஒரு சில நாட்களுக்குப் பிறகு திரும்பவும் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர் மேலும் 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அவ்வளவு பணம் கையில் இல்லை என்றாலும் பயந்து கொண்டு தன்னிடமிருந்து 15,600 ரூபாயை உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அதோடு விட்டுவிடாத அந்த மர்ம நபர் அடுத்த சில நாட்களில் மேலும் இருபதாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.  இதனால் அதிர்ந்து போன திருச்சி நபர் இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவல் பிரிவில்  புகார் அளித்தார். 

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த  காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார்  மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர். பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் போலீஸ்  போல நடித்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீஸார்  அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை  தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் இது போன்று தொடர்பு கொண்டு மிரட்டும் நபர்களை பற்றி காவல்துறையில் புகார் அளிக்குமாறும்,  தங்களின் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் தகவல், அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.  9498156464 அலைபேசி எண்ணிலும்   புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in