
கல்லிடைக்குறிச்சி அருகே உணவுக்காக பனை மரத்தை பெயர்த்தெடுத்த யானை அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. மேலும் இரு மாவட்டங்களும் தமிழக- கேரளா மாநில எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. தற்பொழுது சபரிமலை சீசன் காலம் என்பதால் கேரள வனத்துறையினர் வேட்டு வெடித்து அங்கிருந்து யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டி விடுக்கின்றனர்.
மேலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் யானைகளால் அவர்களுக்கும், அவர்களால் யானைக்கும் தொந்தரவு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து யானைகள் கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு வருகின்றன.
இதனால் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வந்துள்ளன. இந்த நிலையில் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அவை தனியார் தோட்டங்களில் புகுந்து தென்னை வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
இந்த நிலையில் இன்று கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தில் தனியாருக்கு சொந்தமான நிலப்பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று உணவுக்காக பனைமரத்தை பிடித்து இழுத்து உள்ளது. அப்பொழுது ஏற்கெனவே அந்த பனை மரத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் அதிலிருந்த மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ இடத்திலேயே பலியானது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி யானைகளும் யானைக் குட்டிகளும் இறப்பது தொடர்கதை ஆகி வரும் நிலையில் யானைகளை காப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.