ஆண் மருத்துவருக்கு பத்தாண்டு சிறை: பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

ஆண் மருத்துவருக்கு பத்தாண்டு சிறை: பெண் மருத்துவரை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

கரோனா காலத்தில் அரசு ஏற்பாட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சக ஆண் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு மருத்துவர்கள், தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில், பணியில் ஈடுபட ஏதுவாக, சுகாதாரத்துறை சார்பில் விடுதிகளில்  அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில்  தங்கி இருந்தார். அந்த மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.

அப்போது விடுதியில் தங்கியிருந்தபோது, மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பெண் மருத்துவர்  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் அளித்த புகார் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.

விசாரணையில், அவர் பெண் மருத்துவரை  பாலியல் பலாத்காரம் செய்தது  உறுதி செய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த  வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவர் வெற்றிசெல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் , 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் இருபதாயிரம் ரூபாயைப் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in