சென்னையை நெருங்கி வலுவிழக்கிறது தாழ்வு மண்டலம்: இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னையை நெருங்கி வலுவிழக்கிறது தாழ்வு மண்டலம்: இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகி சென்னையை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கும்போது வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்  பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில்  அதிக கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று கணிக்கப்பட்டது. சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.  

ஆனால் அது அது கரையை நெருங்கும்போது வலுவிழக்கக் கூடும். அப்போது வட மாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்யும் எனவும்,  கடந்த இரண்டு தினங்களாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். அதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது. இன்று பகலுக்குள்  அது வலுவிழக்கக் கூடும் என்று தற்போது வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் விளைவாக தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் தமிழக மற்றும் புதுச்சேரியில் 24-ம் தேதி வரை லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கரையை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது கடலில் வேகமான காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சூழ்ந்த அதிக கனமழை அபாயம் தற்போது விலகி விட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in