காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு கரையைக் கடக்கிறது?: டெல்டா வெதர்மேன் கணிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு கரையைக் கடக்கிறது?: டெல்டா வெதர்மேன் கணிப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையைக் கடக்கும் என்றும்,  காற்று குறித்த அச்சம் வேண்டாம் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இலங்கை அருகே  வங்கக் கடல் பகுதியில் நீடித்து வருகிறது. அது இன்று இரவு கரையைக் கடக்கக் கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுகையில், "இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் மயிலாடுதுறை மாவட்டம் பழைய ஆறு, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும். குறிப்பாக நாகை அருகே காலையில் கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக பகுதிகளுக்கு காற்று குறித்த அச்சம் வேண்டாம். தற்போது வீசிக் கொண்டிருக்கும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரையிலான தரைக்காற்று மட்டுமே தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதே நேரத்தில் வட மாவட்ட கடலோரங்கள்,  மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில் பரவலாகத் தொடர்ந்து கனமழை பெய்யும்.  ஒரு சில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.  டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுதினம் காலை வரையிலும்  பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஆய்வாளரான ஆசிரியர் செல்வகுமார் "இன்று இரவு முதல் நாளை காலைக்குள் டெல்டா மாவட்டங்களில்  அதிக கனமழைக்கு  வாய்ப்பு இருக்கிறது.  தென்மாவட்டங்களிலும் இன்று பகலில் தொடங்கி நல்ல மழை பெய்யும்.  உள் மாவட்டங்கள் அனைத்திலும் மழைக்கான வாய்ப்பு தெரிகிறது. மற்றபடி காற்று குறித்த பயம் வேண்டாம்.  திங்கட்கிழமை முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வறண்ட வானிலை காணப்படுவதற்கான வாய்ப்பு தெரிகிறது" என்று கூறியுள்ளார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in