இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில்  கடந்த வாரத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கரையை நெருங்கி சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, சிதம்பரம்  உள்ளிட்ட இடங்களில் அதிக கனமழையை கொடுத்த நிலையில் தற்போது  வங்கக்கடலில்  புதிதாக மீண்டும் ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தெற்கு  அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும்.

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று  தெரிவித்துள்ளார்.

கடந்த வார காற்றழுத்த தாழ்வுப் பகுதியின்  விளைவாக பெய்த அதிக  கனமழையால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை  இன்னும் மீட்டெடுக்க முடியாத நிலையில் இன்று மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேலும் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமோ என்று டெல்டா மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in