சுற்றுச்சுவரை உடைத்து ஓடுபாதையில் நுழைந்த லாரி: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

சுற்றுச்சுவரை உடைத்து ஓடுபாதையில் நுழைந்த லாரி: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

திருச்சி சர்வதேச  விமான நிலையத்தின்  சுற்றுச்சுவரின் மீது இன்று காலை லாரி ஒன்று  மோதி சுவரை உடைத்துக்கொண்டு    விமான நிலைய ஓடு பாதையை நோக்கி சென்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ஓசூரில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டைக்கு தக்காளி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  விமான நிலையம் அருகே  வரும்போது முன்னால்  சென்ற லாரி  திடீரென இடதுபுறம் திரும்பியதால் தக்காளி லாரியின்  ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து வலது புறம் லாரியை திருப்பி உள்ளார். 

இதனால் லாரி விமான நிலைய சுற்றுச்சுவரை உழைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.  அது விமானங்கள் ஓடுபாதை முடிந்து மேலே எழும்பும் இடம் என்பதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. லாரி விமான நிலைய சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற நேரத்தில் விமானம் ஏதும் டேக் ஆப் ஆகவில்லை என்பதும், அப்படி ஏதும்  இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  அந்த பகுதியைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து பன்னாட்டு விமான நிலைய அதிரடிப்படை வீரர்களும், மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களும், விமான நிலைய காவல்துறையினரும், போக்குவரத்து புலனாய்வுத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் அவசரமாக திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேண்டுமென்றே விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு லாரி உள்ளே சென்றதா  என்பதை  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in