பஸ்சில் வரையப்பட்ட குதிரை ஓவியம்; பாசமழை பொழிந்த குதிரைக்குட்டி: வைரலாகும் வீடியோ

பஸ்சில் வரையப்பட்ட குதிரை ஓவியம்; பாசமழை பொழிந்த குதிரைக்குட்டி:  வைரலாகும் வீடியோ

தனியார் பேருந்தில் வரையப்பட்ட குதிரை ஓவியத்தை நிஜ குதிரை என நினைத்து குதிரை குட்டி ஒன்று பாசமழை பொழிந்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓர் ஓவியம் மனிதனின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் விலங்குகளின் மனநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அரிதிலும் அரிதான சம்பவங்களையே உதாரணமாகக் காட்ட முடியும். அந்த வகையில் குதிரையின் படம் உள்ள பேருந்து ஒன்றைக் குதிரைக் குட்டி ஒன்று தனது தாய் என நினைத்து அதனுடன் பாசத்தை வெளிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை, பேரூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாகக் குதிரைக் குட்டி ஒன்று அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளது. அந்த குதிரை குட்டியானது தனது கூட்டத்திலிருந்து திசை மாறி அப்பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தனது தாயைத் தேடி அலைந்து திரிந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரு தனியார்ப் பேருந்தின் பக்கவாட்டில் வரையப்பட்ட ஒரு பெரிய குதிரை ஓவியத்தை அந்த குதிரைக் குட்டி கண்டுள்ளது. பேருந்தில் உள்ள ஓவியம் தனது தாயாகவோ அல்லது தனது இனத்தை சேர்ந்ததாகவோ இருக்க வேண்டும் என நினைத்த அந்த குதிரைக் குட்டி அந்த ஓவியத்தையே சில நிமிடம் உற்று நோக்கி பாசத்தை வெளிப்படுத்தி உள்ளது. அந்த பேருந்து புறப்பட்ட போது முன்புறமாக நின்று அந்த பேருந்தை மறித்துள்ளது. குதிரையின் தடையையும் மீறி பேருந்து சென்ற போது குதிரை ஓவியம் உள்ள பக்கமாகக் குதிரையும் வேகமாக ஓடியது. இந்த சம்பவங்களை அப்பகுதியினர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குதிரையின் பாசப் போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in