தங்கையின் திருமணத்திற்கு அட்சதை போட்ட சில நிமிடங்களில் அண்ணனுக்கு நடந்த பயங்கரம்: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

சாமிநாதன்
சாமிநாதன்

இன்று நடைபெற்ற தனது தங்கையின் திருமணத்திற்கு வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், வந்த இடத்தில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சாமிநாதன்(37). இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை தையல்நாயகிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்திய சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு அருகிலுள்ள ஓட்டலுக்குள் சென்று செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்திருந்தார். அப்போது வேகமாக வந்து நின்ற இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சாமிநாதனை அரிவாள்களால் கொடூரமாக வெட்டத் தொடங்கினர். இதில் சாமிநாதனுக்கு தலை, முகம் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது.

இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான போலீஸார், சாமிநாதனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சாமிநாதன் கொலைக்கான காரணம் என்ன என்பதையும், திருமணத்திற்கு வந்த இடத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சாமிநாதனே கொலை செய்த குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in