நடுரோட்டில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு... சிக்கிய ரவுடி, கூட்டாளிகள் எஸ்கேப்: இரவில் சென்னையில் பயங்கரம்

நடுரோட்டில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு... சிக்கிய ரவுடி, கூட்டாளிகள் எஸ்கேப்: இரவில் சென்னையில் பயங்கரம்

இருசக்கர வாகனத்தில் பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலைமறைவான கூட்டாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு வழியாக நேற்று இரவு 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கொண்டு சென்ற பேப்பர் பை ஒன்று திடீரென அறுந்து கீழே விழுந்தது. அப்போது பலத்த சத்தத்துடன் பை வெடித்து சிதறியது. வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைத்து ஓடிவந்து பார்த்தபோது வெடிகுண்டு வெடித்தற்கான தடம் இருந்தது. மேலும் அருகில் இருந்த டீ கடை கண்ணாடி நொறுங்கி கிடந்தது. பொதுமக்கள் ஓடிவருவதை பாரத்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். உடனே பொதுமக்கள் இது குறித்து மாங்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மாங்காடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். சம்பவயிடத்தில் இருந்து சிறிது தூரத்தில் காலில் பலத்த காயங்களுடன் ஒருவர் படுத்து கிடப்பதாக தகவல் கிடைத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ரவுடி வினோத்குமார் (27), என்பதும் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேப்பர் பையில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்து காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் வினோத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை அங்கேயே விட்டுவிட்டு நண்பர்கள் தப்பி சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. படுகாயமடைந்த வினோத்குமாரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் அனுமதித்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், யாரையாவது கொல்ல நாட்டு வெடிகுண்டு எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டத்திற்கு கொண்டு சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி சென்ற ரவுடி வினோத்குமாரின் கூட்டாளிகளை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.

இரவு நேரத்தில் நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in