ஓனருக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்; ஒரே வாரத்தில் நகையுடன் எஸ்கேப்: அதிரவைத்த வடமாநில வாலிபர்!

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

நகை பட்டறையில் வேலைக்குச் சேர்ந்த ஒருவாரத்திலேயே நகையுடன் பட்டறைத் தொழிலாளி தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் குமார்(47). இவர் கடியப்பட்டினம் பகுதியில் நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரிடம் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடமாநிலத்தைச் சேர்ந்த லால்சிங் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். வடமாநிலத்தைச் சேர்ந்த அவர் குமார் வீட்டிலேயே தங்கியிருந்து வேலை செய்துவந்தார். குமார் காலையில் வீட்டில் இருந்து பட்டறைக்குச் செல்லும்போது அவரையும் அழைத்து செல்வார். மாலையில் அவருடனே தன் வீட்டுக்கு செல்வார்.

இந்நிலையில் சாப்பாட்டு நேரத்தில் நேற்று மதியம் குமார், லால்சிங்கிடம் தன் பைக்கைக் கொடுத்து சாப்பிட்டுவரச் சொல்லியிருக்கிறார். ஆனால் லால் சிங் திரும்பிவரவில்லை. அப்போதுதான் பட்டறையில் இருந்த நகைகளை சோதித்துப் பார்த்தார் குமார். அதில் 8 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

நகைப்பட்டறையில் வடமாநில இளைஞரை பணிக்குச் சேர்த்துவிட்டது யார் என்ற கோணத்தில் போலீஸார் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகையுடன் மாயமானவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அங்கே சென்றிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். கடைக்கு சேர்ந்து ஒருவாரத்திலேயே உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று அவர் வீட்டிலேயே தங்க வைக்கும் அளவுக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் நெருக்கமாக இருப்பது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in