
கேரள எல்லையான குமுளி - வாழையார் சோதனைச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதற்காக அங்குள்ள கேரள அதிகாரிகள் தமிழக வாகனங்களை அதிக நேரம் காக்க வைக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது
கடவுளின் தேசமான கேரளத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அது மட்டுமன்றி அங்குள்ள சபரிமலை, சோட்டானிக்கரை, குருவாயூர் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களுக்கும் தமிழகத்திலிருந்து பெருமளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். சபரிமலை சீசனான தற்போது சபரிமலைக்கு தமிழ்நாட்டிலிருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்று வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தென் தமிழக எல்லைப்பகுதியான குமுளி - வாழையார் ஆர்.டி.ஓ சோதனைச்சாவடி வழியாகவே கேரளாவிற்கு செல்கின்றனர். அப்படி செல்லும் வாகனங்களை லஞ்சம் பெறுவதற்காக, அங்குள்ள கேரள சோதனைச்சாவடி அதிகாரிகள் அதிக நேரம் காக்க வைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறும்போது, "தமிழகத்திலிருந்து செல்லும் டூரிஸ்ட் வாகனங்களை கேரள எல்லையான குமுளி - வாழையார் செக் போஸ்ட்களில் உள்ள கேரள அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் அனுமதிக்கின்றனர். அதிகாரிகள் கேட்கும் பணத்தை தமிழக வாகன ஒட்டிகள் தர மறுத்தால் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று மணிக்கணக்கில் காத்திருக்கவும் வைக்கின்றனர்.
இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தேவையற்ற தாமதத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். ஆகவே கேரளா எல்லைப் பகுதியான குமுளி - வாழையார் செக் போஸ்ட்களில், கேரள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து சோதனை செய்ய வேண்டும்.
கேரள மாநிலத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், செக் போஸ்ட்களில் உள்ள அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருவது மிகுந்த வருத்ததை தருகிறது. எனவே அந்த லஞ்ச அதிகாரிகள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.