
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கர்நாடக அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது நாசமானது. இருசக்கர வாகனத்தில் சென்ற ராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஒட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன்(45). ராணுவ வீரரான இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான கணேசன்(35) என்பவருடன், இன்று காலை 11 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சிக்காரி மேடு பகுதியை கடக்கையில் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி விரைந்த கர்நாடக அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் உடல் நசுங்கி அங்கேயே இறந்தனர். மேலும், பேருந்தில் இருசக்கர வாகனம் சிக்கியதில் தீப்பொறி எழுந்து தீயாக பேருந்தில் பரவியது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். அனைவரும் பேருந்திலிருந்து இறங்கி விட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில் அந்த தீ பேருந்து முழுவதும் பற்றியது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்தில் பெரும்பான்மையான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து மோதி இருவர் உயிரிழந்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.