தீயாய் பரவுகிறது விஷக்காய்ச்சல்: பள்ளிகளுக்கு இன்று முதல் செப்.25-ம் தேதி வரை விடுமுறை

மருத்துவமனையில்  குழந்தைகளுடன் நிற்கும் பெற்றோர்கள்
மருத்துவமனையில் குழந்தைகளுடன் நிற்கும் பெற்றோர்கள்

புதுச்சேரியில் வேகமாக பரவும் விஷக்காய்ச்சலால் பள்ளி  மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு விஷக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களால் பிற மாணவர்களுக்கும் காய்ச்சல் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் உள்ள  அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுடன் பெற்றோர்கள்  கூட்டம் நிரம்பி வழிகிறது.  குழந்தைகள் மூலமாக பெரியோர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது.  இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் முகக்கவசம் கட்டாயம் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து நாட்களில் 50 சதவீதம் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  இதனையடுத்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சில தினங்கள் விடுமுறை அளிக்குமாறு பள்ளி கல்வித்துறைக்கு அம்மாநில சுகாதாரத்துறை நேற்று  வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதனையடுத்தது உடனடி நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பரவி வரும் காய்ச்சலை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் இன்று 17-ம் தேதி முதல் வருகிற 25-ம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை என  கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதன் மூலமாகவாவது  புதுச்சேரியில் பரவி வரும் விஷக்காய்ச்சல் குறையுமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  இன்னும் வேகமான தடுப்பு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

படம் எம் சாம்ராஜ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in