திடீரென சாலையில் பாய்ந்த நாய்; பிரேக் அடித்த அரசுப் பேருந்து ஓட்டுநர்: தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த நடத்துனர்

அந்த பேருந்து
அந்த பேருந்து

பேருந்தின் குறுக்கே வந்த நாயை காப்பாற்ற முயன்ற அரசு பேருந்து ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் உயிரிழந்த பரிதாப சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் நோக்கி தடம் எண் 56 நகர பேருந்து இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. புதூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். அத்தனூர் ஆலம்பட்டியைச் சேர்ந்த நடத்துனர் ராஜேந்திரன் ( 56 ) பயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்.

பேருந்து செட்டிச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பசவக்கல் என்ற இடத்தில் திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடி வந்தது. அதனை கவனித்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சீனிவாசன் திடீரென பிரேக் அடித்தார். இதில் பேருந்தில் இருந்த நடத்துனர் ராஜேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இது விழுந்த ராஜேந்திரனுக்கு தலையில் பலமாக அடிபட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் அரசுப் பேருந்திலேயே ராஜேந்திரனை ஏற்றிக்கொண்டு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in