
நண்பரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பார்டி வைக்கப்பட்டதோடு, போதையில் இருந்த கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்ட பள்ளி மற்றும் ஐடிஐ மாணவன் உட்பட 4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் மது விருந்துடன் கஞ்சா பார்ட்டி நடைபெற்றது. அந்த மாணவன் தன்னுடன் படிக்கும் சக நண்பர்கள் 3 பேர், மற்ற கல்லூரியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் ஏழு பேருடன் சேர்ந்து பச்சையப்பன் கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து மதுவுடன் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அதே பகுதியில் அமர்ந்து கஞ்சா புகைத்தனர். பின்னர் அந்த கும்பல் கொண்டு வந்த கஞ்சா தீர்ந்து விட்டதால் அருகில் இருந்த கல்லூரி மாணவர்களிடம் பேச்சு கொடுத்து தங்களுக்கு கஞ்சா கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் கஞ்சா கொடுக்க மறுத்ததால் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்கள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்ததுடன், கல்லூரி மாணவர்களை சரமாரி தாக்கியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் பதற்றமடைந்த சக கல்லூரி மாணவர்கள் உடனே கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற போலீஸார் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சூளைமேடு, செனாய்நகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் ஐடிஐ மாணவன் உட்பட 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.