
கஞ்சா விற்ற பெண் திருந்தி வாழும் நிலையில் அவருக்கு பெட்டிக்கடை வைத்து மறுவாழ்வை ஏற்படுத்தி இருக்கிறது கோவை காவல்துறை.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திருந்தி வாழ்ந்து வரும் சரஸ்வதி, கிடைக்கும் கூலி வேலையை செய்து வருகிறார். இதனை அறிந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் சரஸ்வதிக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெட்டிக்கடை ஒன்றை சரஸ்வதிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் வைத்துக் கொடுத்தனர். தற்போது அந்த பெட்டிக்கடையில் சரஸ்வதி வியாபாரம் செய்து வருகிறார். கஞ்சா வியாபாரம் செய்த பெண்ணுக்கு மறுவாழ்க்கை கொடுத்திருக்கும் கோவை காவல்துறையினரின் நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.