ஓடும் ரயிலில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்; அலறிய பயணிகள்: ரவுடிக்கு மரணபயம் காட்டி தப்பியோட்டம்

ஓடும் ரயிலில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்; அலறிய பயணிகள்: ரவுடிக்கு மரணபயம் காட்டி தப்பியோட்டம்

கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு ரயிலில் திரும்பியபோது ரவுடியை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் தாக்கிவிட்டு தப்பியது.

சென்னை துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ரவுடி ரவீஸ்வரன்(55). இவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு எம்.கே.பி.நகரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உறவினர் ஒருவரை ரவீஸ்வரன் மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி சேர்ந்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் நேற்று மதியம் ரவீஸ்வரன் அவரது தந்தை வேலுச்சாமி ஆகிய இருவரும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

பின்னர் ரவீஸ்வரன் மற்றும் அவரது தந்தை கடற்கரையில் இருந்து திருவான்மியூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறி சென்றனர். கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும்போது திடீரென ரயிலுக்குள் புகுந்த 4 கொண்ட மர்ம கும்பல் ரவீஸ்வரனை கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றது. பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து அந்த கும்பல் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றது. படுகாயமடைந்த ரவீஸ்வரனை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்ய முயன்றார்களா? அல்லது வேறு காரணமா என எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் ரவுடியை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in