கொடுத்தக் கடனை திரும்பக் கேட்டதால் ஆத்திரம்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கொன்றவர் கைது

கைது செய்யப்பட்ட அருண்குமார்
கைது செய்யப்பட்ட அருண்குமார்மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கொலை செய்த நண்பன் கைது..!

மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சக நண்பரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(28). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார்.  இந்தநிலையில் கடந்த சில தினங்களாக செல்வகுமாரை காணவில்லை என அவரது தாயார் சாந்தி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சுங்கச்சாவடி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் அந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் காணாமல் போன செல்வகுமார் என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக செல்வகுமாரிடம் பழக்கமுடைய நண்பர்களிடம் விசாரித்ததில், குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் அருண்குமார் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்து அவர்களது பாணியில் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அருண்குமார் போலீசாரிடம், ’’நான் சுங்கச்சாவடியில் ஏர்டெல் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன். எனக்கும் செல்வகுமாருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தோம். கடந்த மாதம் ஏழாம் தேதி இருவரும் அமர்ந்து மது அருந்தும் போது நான் கடனாக அளித்த பணத்தை திரும்ப கேட்டேன். அதை தர மறுத்து தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்து இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தேன்’’ என அருண்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அருண்குமார் மீது கொலை வழக்கு பதிந்து அவனை கைது செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in