ஆழித் தேரோட்டம்: திருவாரூரில் கொடியேற்றம்

கொடியேற்றம்
கொடியேற்றம் ஆழித் தேரோட்டம்: திருவாரூரில் கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்  தேரோட்டம்  நடைபெறும் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு இன்று  கொடியேற்றம் நடைபெற்றது. 

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா  ஆண்டுதோறும் வெகு சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழாவின்போதுதான் உலகப் புகழ் பெற்ற ஆழி தேரோட்டமும் நடைபெறும். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் முன்னின்று நடத்தியிருப்பதாகவும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. 

ஹஸ்த நட்சத்திரத்தில் துவஹாரோஹணம் எனும் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழாவை பூர்த்தி செய்வது  என்பது திருவாரூர் பங்குனித் திருவிழா குறித்த சொலவடை. 

இத்தகைய சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரிய  கொடியேற்றம் அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று காலை நடைபெற்றது. அதையொட்டி முன்னதாக காலையில் சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு வீதி உலாவுக்குச் சென்றனர். வீதி உலாவுக்குப் பிறகு, பஞ்சமூர்த்திகளும் தியாகராஜர் சந்நிதி கொடிமரம் முன்பு நிறுத்தப்பட்டனர். பின்னர், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றப்பட்டதை அடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவார் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்து, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தனர். 

கொடியேற்ற நிகழ்வைக் காண ஏராளமான  பக்தர்கள் வந்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in