பிறந்த நாளில் வெடித்த பிரச்சினை: 4 வயது மகனுடன் மின்சார ரயில் முன் பாய்ந்த பெண் அதிகாரி

தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரி
தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரிபிறந்த நாளில் வெடித்த பிரச்சினை: 4 வயது மகனுடன் மின்சார ரயில் முன் பாய்ந்த பெண் அதிகாரி

மகன் பிறந்த நாளில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து பெண் அதிகாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் செந்தில் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்வளர்ச்சித் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பிரேமலதாவின் மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் நேற்று கொண்டாடினர். அப்போது பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பிரேமலதாவைக் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பிரேமலதா, தனது 4 வயதான இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரயில் நிலையம் வந்தார். பின்னர் அவர், மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதற்கிடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரயில் எஞ்சின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினர். எனினும் ரயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற போது பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் உதவியுடன் காயம் அடைந்த பிரேமலதாவையும், அவரது மகனையும் அதே மின்சார ரயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர். இதற்குள் சம்பவம் பற்றி ரயில்வே போலீஸாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் பிரேமலதாவையும் அவரது மகனையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரியான நேரத்தில் மின்சார ரயிலை டிரைவர் நிறுத்தியதால் இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி உள்ளனர். மின்சார ரயிலை சாதுரியமாக நிறுத்திய டிரைவரை பொது மக்கள் பாராட்டினர். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in