
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரை அடித்து கொலை செய்த பெண் தோழி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரகாஷிற்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் நேற்று காலை பிரகாஷ் தனது பெண் தோழி ஒருவருடன் பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு பிரகாஷுடன் வந்த பெண் தோழி, விடுதி மேலாளரிடம் சென்று தன்னுடன் வந்த நபர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர் உடனே இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் பிரகாஷ் உடன் வந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரகாஷுடன் வந்த பெண் தோழி பிரியா(42) என்பதும் கொசப்பேட்டையில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் பிரியாவுக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. இந்த நிலையில் பிரியா 5 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்து வரும் போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரகாஷுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் தொடர்பை துண்டித்து கொண்ட நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மீண்டும் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து, நேற்று பெரியமேட்டில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் பிரகாஷ் திடீரென உயிரிழந்தது தெரியவந்தது.
பிரகாஷின் மரணம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரியாவிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே பிரகாஷ் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்திருந்த நிலையில் பிரகாஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தலையில் ஏற்பட்ட உட்காயம் காரணமாக மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையின் தெரியவந்தது. இதனையடுத்து பிரகாஷின் பெண் தோழி பிரியாவிடம் விசாரணை நடத்தியதில் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், கையால் இருவரும் தாக்கி கொண்டதாகவும், அப்போது அவரை பிடித்து தள்ளியதில் பிரகாஷ் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பெரியமேடு போலீஸார் பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய ஆண் நண்பரை குடிபோதையில் அடித்து கொலை செய்துவிட்டு பெண் நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.