மகள் வயது பெண்ணை திருமணம் செய்த விவசாயி: ஆத்திரத்தில் மனைவி, மகன் செய்த கொடூரம்

மகள் வயது பெண்ணை திருமணம் செய்த விவசாயி: ஆத்திரத்தில் மனைவி, மகன் செய்த கொடூரம்

கீழக்கரை அருகே மகள் வயது பெண்ணை 3-ம் திருமணம் செய்து கொண்ட விவசாயி குத்திக்கொல்லப்பட்டார்.  ஆத்திரமடைந்த மனைவியும், மகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே குளபதம் பகுதியைச் சேர்ந்தவர் வையக்கிழவன்( வயது 58). விவசாயியான இவர், வயல் நீர் காவலாளியாகவும் இருந்தார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் நிரந்தரமாக பிரிந்தனர். இதையடுத்து, சுப்புலட்சுமி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

இந்நிலையில், வெள்ளா பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி (25) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இத்திருமணம் வீட்டுக்கு தெரிய வந்ததால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன், ராமலட்சுமியை அழைத்து வந்து வீடு அருகே குடியமர்த்தினார். இதனால், வீட்டில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இந்நிலையில், விவசாய பணிக்காக வையக்கிழவன் கூலி ஆட்களை சேர்த்துக்கொண்டு இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். அப்போது 2 வது மனைவி சுப்புலட்சுமி (54) மகன் வசீந்திரன் (26) இருவரும் சேர்ந்து, வையக்கிழவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் இருந்த தாயும், மகனும் சேர்ந்து வையக்கிழவனை தாக்கினர். வீட்டில் கிடந்த இரும்பு கம்பியால் வையக்கிழவன் மார்பில் குத்தினர். இதில் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த கீழக்கரை போலீசார் வையக்கிழவனின் உடலை மீட்டனர். இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in