நள்ளிரவில் பற்றி எரிந்த குடிசை வீடு: மனைவியின் நினைவு நாளில் உயிரை மாய்த்த பிரபல ரவுடி

ரவுடி பிரசாத்
ரவுடி பிரசாத்

மனைவி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ராஜபுரணிக்கர் தெருவில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தவர் ரவுடி பிரசாத் (34). இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி குளோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி (இன்று) குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மனைவி குளோரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று ரவுடி பிரசாத் மது போதையில் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். தனது உறவினர்களுடன் பேசிவிட்டு, வீட்டினுள் சென்ற பிரசாத் கதவை தாழிட்டுக்கொண்டு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

குடிசை வீடு என்பதால் தீ வீட்டின் மேற்கூரையிலும் பரவியது. வீடு தீ பிடித்து எரிவதை பார்த்த உறவினர்கள் மற்றும் பிரசாத்தின் அண்ணன் பிரதீப் ஆகியோர் உடனே தீயணைப்புத் துறை மற்றும் கோடம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது பலத்த தீக்காயங்களுடன் பிரசாத் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்தனர். பின்னர் கோடம்பாக்கம் போலீஸார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பிரசாத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் நினைவு நாளன்று ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in