குடும்பத்தகராறில் விபரீதம்; 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி: இரு குழந்தைகள் பலி

சின்னமனூர் அருகே தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த குடும்பம்
சின்னமனூர் அருகே தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த குடும்பம் குடும்பத்தகராறில் விபரீதம்; 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி: இரு குழந்தைகள் பலி

சின்னமனூர் அருகே குடும்பமே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது. இதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பொட்டிபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ராமராஜ், (30). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜபாண்டி (6) என்ற மகனும், ஈஸா (3), ஜீவிதா, (2) என்ற மகள்கள் உள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடுப்பஞ்சோலை காரி தோடு என்ற இடத்தில் குடும்பத்தினருடன் தங்கி ஏலத்தோட்டத்தில் ராமராஜ் கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் வீரமணி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்று விடுவார். கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊரில் தனது 3 குழந்தைகளுக்கு மொட்டை போட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். தம்பதிக்கு இடையே நேற்று மாலை மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.

பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், ஆவேசமடைந்த ராமராஜ் தனது மூன்று குழந்தைகளை தூக்கிக்கொண்டு மனைவி வீரமணியை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தண்ணீரில்லா கிணற்றுக்குச் சென்றார். மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி போட்டு தம்பதி இருவரும் கிணற்றில் குதித்தனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம், பக்கத்தினர்,உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போடி தாலுகா போலீஸார் அங்கு வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

முகம் சிதைந்த நிலையில் ராமராஜ், இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் வீரமணி, படுகாயங்களுடன் மகன் ராஜபாண்டி ஆகியோரை மீட்டனர். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஈஸா, ஜீவிதா ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in