தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?: தமிழக அரசு பரிசீலனை

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?: தமிழக அரசு பரிசீலனை

தீபாவளிக்கு மறுநாள் (அக்.25) தமிழக அரசு சார்பில் விடுமுறை அளிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் 10லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு வழக்கமான அரசு விடுமுறை நாட்களாகும். திங்கள் கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இதனால், வெளியூர் பயணம் செய்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து அக். 21-ம் தேதி மாலையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்குச் சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக அக். 25, 26 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்து, அதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்கு மறுநாள்( அக். 25) பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளும் செயல்படுகிறது. அதனால் விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பேருந்துகளிலும் நெரிசல் ஏற்படக்கூடும். எனவே, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி,தீபாவளிக்கு மறுநாளான அக். 25-ம் தேதி விடுமுறை விடலாமா என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கும், ஊர் திரும்பவும் அக். 25-ம் தேதி விடுமுறை விடுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் (நவ. 12) இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்குவது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in