காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; மீண்டும் நடப்படும் யூகலிப்டஸ் மரம்: கொந்தளிக்கும் விவசாயிகள்

காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; மீண்டும் நடப்படும் யூகலிப்டஸ் மரம்: கொந்தளிக்கும் விவசாயிகள்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சிவகங்கை மாவட்ட வனத்துறையினர் யூகலிப்டஸ் மரத்தை நடவு செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 25-ம் தேதி பொதுநல வழக்கு ஒன்றில், தமிழக வனத்துறையின் கீழ் இயங்கும் காப்புக்காடுகளிலும், சமூக நல காடுகளிலும் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் இடையூறாக இருக்கும் யூகலிப்டஸ் எனும் தைல மரங்களை உடனடியாக தமிழக அரசு அகற்ற வேண்டும் என்ற உத்தரவிற்கு பதிலளித்த தமிழக வனத்துறை, ஒரு வருட காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள காப்பு காடுகள் மற்றும் சமூக நல காடுகளில் தைல மரங்களை நிரந்தரமாக அகற்றி விடுவதாக பிரமாண பத்திரத்தில் உறுதி அளித்துள்ளது.

அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறட்சியான மாவட்டங்களில் நான்கு மாத காலத்திற்குள் இந்த யூகலிப்டஸ் மரங்களை அகற்றி விடுவதாக உறுதி அளித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நேற்று, அடுத்த மாதம் தொடங்க இருக்கிற பருவ மழையை கருத்தில் கொண்டு மானாமதுரை பகுதியில் உள்ள காட்டூரணி காப்புக்காடுகள் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் புதிதாக கன்று நடவும், பயிரிடப்பட்டுள்ள கன்றுகளை பாதுகாக்கவும் டிராக்டர்கள் மூலம் உழவு செய்து வருகிறார்கள். இதன்மூலம் மீண்டும் யூகலிப்டஸ் மரத்தை பயிரிடுவதற்கான அனைத்து வேலைகளையும் நீதிமன்ற உத்தரவை மீறி சிவகங்கை மாவட்ட வனத்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மானாமதுரை பகுதியில் மானாவாரிக் கண்மாய்களுக்குச் செல்லும் மழைநீர் வரத்து கால்வாய்கள் அனைத்தையும் வழிமறித்து உழவு செய்து மீண்டும் யூகலிப்டஸ் மரத்தை நட முயற்சிக்கும் வனத்துறையினரின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்று காவிரி -வைகை கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்துள்ளது.

உடனடியாக சிவகங்கை மாவட்ட வனத்துறை மானாமதுரை பகுதியில் புதிதாக கன்று நடுவதையும், உழவு செய்து தண்ணீர் வரத்தை தடுப்பதையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவிட்டால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளைத் திரட்டி யூகலிப்டஸ் கன்றுகள் நடவு செய்வதைத் தடுத்து நிறுத்தும் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றோம் என காவிரி - வைகை- கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் இராம.முருகன் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in