நடுவழியில் பஞ்சராகி நின்ற கண்டெய்னர் லாரி: ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம்

நடுவழியில் பஞ்சராகி நின்ற கண்டெய்னர் லாரி: ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம்

சாலையோரத்தில் கண்டெய்னர் லாரி பஞ்சர் ஆகி நின்றதால், பனிமூட்டமான அதிகாலை நேரத்தில் அதுகுறித்து பின்னால் வரும் வாகனங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சாலையில் நின்று சைகை காட்டிய ஓட்டுனர், லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(23) கண்டெய்னர் லாரி டிரைவரான இவர் மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி இன்று கண்டெய்னர் ஓட்டி வந்தார். ஆவடி அருகே உள்ள திருமணம் கிராமத்தில் வந்தபோது கண்டெய்னர் லாரியின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் லாரியை சாலையில் ஒதுக்கி நிறுத்தியவர் பனிமூட்டமான அதிகாலை நேரம், பின்னால் வரும் வாகனங்களுக்குத் தெரியாது என்பதால், அவர் கண்டெய்னர் லாரியின் முன்பு நின்றுகொண்டு சைகை காட்டிக்கொண்டு இருந்தார்.

அப்போது வண்டலூரை நோக்கி தாமிரக் கம்பி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த திருப்பதி ஓட்டிவந்தார். இவர் இதை கவனிக்கவில்லை. இந்த லாரி சைகை கொடுத்துக்கொண்டு இருந்த ஆகாஷை இடித்ததோடு, நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்துவந்த இன்னொரு லாரி, திருப்பதி ஓட்டிவந்த லாரியின் மீது மோதியது. இதில் அந்த லாரியை ஓட்டிவந்த திருவேற்காட்டை சேர்ந்த வெங்கடேஷ்வரன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் அந்த சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்தையும் முடக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in