
ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டி பகுதியை சேர்ந்த கன்னியப்பன் பழனியம்மாள் தம்பதியின் மகள் கார்த்திகாஜோதி(19), இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சக்தி கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதியன்று கல்லூரியில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றார்.
அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.